திருச்செந்தூர் கோவிலில் ஜுன் மாதத்திற்குள் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 month ago 8

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அப்படி வருகை தருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, பக்தர்கள் இறை தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் நிற்காமல் விரைவாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் இத்திருக்கோயில் வளாகத்தில் ரூ. 48,36 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி உள்ளிட்ட 4 புதிய திட்டப் பணிகளுக்கு வருகின்ற 14ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

இந்த புதிய பக்தர்க்ள் தங்கும் விடுதியானது 540 நபர்கள் தங்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திருக்கோயிலில் முதல் கட்டமாக நடைபெற்று வரும் 21 பணிகளையும், இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் 24 பணிகளையும் இன்று ஆய்வு செய்தோம். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட திட்டமிட்டு இருக்கின்றோம். ஆகவே இப்பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் மாதத்திற்கு ஒரு முறை துறையின் அமைச்சர் என்ற வகையில் நானும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களும், மதிப்பிற்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் அவ்வபோது ஆய்வு செய்திட உள்ளோம்.

முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு ஆட்சி அமைந்த பிறகு சுமார் 1,040 கோடி ரூபாய் அளவிற்கு முருகன் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், வடபழனி ஆண்டவர் திருக்கோயில் மற்றும் சிறுவாபுரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுக்கு நடத்தப்பட்டன. திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர், திருத்தணி, வயலூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள முருகன் திருக்கோயில்கள் பெருந்திட்ட வரைவில் (மாஸ்டர் பிளான்) எடுத்துக்கொள்ளப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்துமே அடுத்த ஆண்டு டிசம்பர் அல்லது அதன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

கந்த சஷ்டி துவங்குவதற்கு முன்பாக யாத்திரி நிவாஸ் என்று அழைக்கப்பட்டட பக்தர்கள் தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம். முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளிலிருந்து இதற்கான முன்பதிவு தொடங்கப்படும். இதனை நிர்வகிக்கும் பணிகளை திருக்கோயில் நிர்வாகம் அல்லது சுற்றுலாத்துறையின் மூலமாக மேற்கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். திருச்செந்தூர் கடற்கரையில் கற்கள் கொட்டப்படுகின்ற பணி பக்தர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்ற பணியாகும். இதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து தான் இந்த முடிவினை எடுத்து இருக்கின்றோம். இந்த திருக்கோயிலை பொறுத்த அளவில் 2011 -2012ல் திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டிய சூழல் இருந்தும் அதற்குண்டான முயற்சிகளை அப்போதைய அரசு எடுக்கவில்லை.

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இத்திருக்கோயிலுக்கு மாஸ்டர் பிளானை தயார் செய்து, முதலமைச்சர் அவர்களின் அனுமதியை பெற்று தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்புதான் திருகோயில் சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்தோம். இதற்கு முன்பு புகார்தாரராக ஆணையாளராக தான் இருந்தார். புகார்தாரர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம். ஆகவே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது பல குற்ற வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் இராஜகோபுரத்தின் கலசங்களுக்கு தங்கமூலாம் பூசும் பணி முயற்சி மேற்கொள்ளப்படும்.

திருச்செந்தூர் கடற்கரை பொறுத்த அளவில் கடல் அரிப்பு ஒருபுறம் என்றாலும், தண்ணீர் அவ்வப்போது கடல் உள்வாங்குகிற சூழ்நிலையும் இருக்கின்றது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து பக்தர்களுடைய பாதுகாப்பினை கருதி கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் இயற்கை சீற்றங்கள் வருகின்ற பொழுது பக்தர்களுடைய பாதுகாப்பிற்காகவும் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கடலில் கற்கள் கொட்டுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றன. இதில் சுமார் 50 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுற்றிருக்கின்றது. தொடர்ந்து அந்த பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தங்கும் விடுதிக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம் தனியார் விடுதியை விட குறைவாகத்தான் கட்டணம் இருக்கும். இது குறித்து கலந்தாலோசித்து பக்தர்களுக்கு அதிக சுமை இல்லாமல் அதே நேரத்தில் நல்ல முறையில் பராமரித்திடும் வகையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்காரம் குறித்து அனைத்து அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் 10 நாட்களுக்குள் நடத்த இருக்கின்றோம். திருச்செந்தூர் திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பக்தர்களுக்கு சிறு சிறு சிரமங்கள் சங்கடங்கள் இருந்தாலும் கூட அதைப் பொறுத்தது கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தந்து இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகின்ற ஒரு திருக்கோயிலாக இந்த திருக்கோயில் திராவிட மாடலாட்சியில் அமையும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி ஆட்சியர் க. இளம்பகவத், கூடுதல் ஆணையர் இரா. சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட ஊராட்சி தலைவர் அ. பிரம்மசக்தி, இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, மண்டல இணை ஆணையர் எம். அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர். அருள் முருகன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர் எஸ். ஞானசேகரன், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், வட்டாட்சியர் திரு.பாலசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூர் கோவிலில் ஜுன் மாதத்திற்குள் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article