மதுரை: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை பகல் 12.05 முதல் 12.45க்குள் நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சபரிமலை அய்யப்பன் கோவிலின் மேல்சாந்தி, திருச்செந்தூர் கோவில் ஸ்தானிகர், மனுதாரர் உள்ளிட்டோருடன் இணைந்து திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் திருச்செந்தூர் கோவிலில் 07.07.2025ல் காலை 9 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற குறிக்கப்பட்டுள்ள நேரம், வேதங்கள், சாஸ்திரங்கள், கோவிலில் பின்பற்றப்படும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த உகந்த நேரம் அல்ல என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே குடமுழுக்கை பகல் 12.05 முதல் 12.45க்குள் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதே நேரத்தில் குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என சிவராம சுப்பிரமணிய சாஸ்திரியும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுதாக்கல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 வித நேரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலின் மேல்சாந்தி, திருச்செந்தூர் கோவில் ஸ்தானிகர், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் கோவில் ராஜா குருக்கள் மற்றும் மனுதாரர் ஆகியோர் இணைந்து திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
The post திருச்செந்தூர் குடமுழுக்கு நேர வழக்கு: ஆலோசித்து முடிவு செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.