புதுடெல்லி: திடீர் ஆலங்கட்டி மழையால் டெல்லியில் இருந்து சென்ற விமானத்தின் மூக்குப்பகுதி உடைந்தது. அதில் பயணம் செய்த 220 பயணிகள் பத்திரமாக தப்பினர். டெல்லியில் இருந்து நகருக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. இதில் 220 பயணிகள் இருந்தனர். டெல்லியில் நேற்று மாலை புழுதிப்புயல் வீசியது. மின்தடை ஏற்பட்டது. விமானம், ரயில் இயக்கம் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட விமானம் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதில் விமானத்தின் முன்பகுதியான மூக்குப்பகுதி சேதம் அடைந்து ஓட்டை விழுந்தது.
இதனால் பயங்கர பீதி ஏற்பட்டது. இருப்பினும் விமான பைலட் மற்றும் கேபின் குழுவினர் உரிய பாதுகாப்புநெறிமுறைகளை பின்பற்றி விமானத்தை நேற்று மாலை 6.30 மணிக்கு பாதுகாப்பாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதனால் 220 பயணிகள் பத்திரமாக தப்பினர். இதுதொடர்பாக வைரலான வீடியோவில், புழுதிப்புயல் மற்றும் ஆலங்கட்டி மழையில் சிக்கிய பிறகு விமானம் கடுமையாக அதிர்ந்ததையும், அதில் இருந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் அலறி அழுத வீடியோவும் வெளியாகி உள்ளது. விமான நிறுவனம் எந்த சேதத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் வைரலான படத்தில் ஆலங்கட்டி மழையால் விமானத்தின் மூக்கின் ஒரு பகுதி உடைந்திருப்பது தெளிவாக தெரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திடீர் ஆலங்கட்டி மழை நடுவானில் உடைந்த விமானத்தின் மூக்கு: பத்திரமாக தப்பிய 220 பயணிகள் appeared first on Dinakaran.