இந்தியர்களை உளவாளிகளாக மாற்றிய விவகாரம் மேலும் ஒரு பாக். அதிகாரி வெளியேற்றம்: ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

1 day ago 1

புதுடெல்லி: இந்தியர்களை உளவாளிகளாக மாற்றிய விவகாரத்தில் மேலும் ஒரு பாக். அதிகாரியை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூா் பெயரில் பாக்.கில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதனால் இருநாடுகள் இடையே 4 நாட்கள் கடும் போர் நடந்தது. அதன்பின் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று அழைக்கப்பட்ட டேனிஷ் என்பரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இந்தியர்கள் பலரை அவர் உளவாளிகளாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக பிரபல யூடியூபர் ‘நாடோடி லியோ கேர்ள்’ ஜோதி மல்ஹோத்ரா, யாத்ரி டாக்டர் உள்ளிட்டவர்கள் அவரால் உளவாளிகளாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் டேனிஷ் மூலம் உளவாளிகளாக மாறி உள்ளனர்.

ஜோதி மல்ஹோத்ராவை, அலி அஹ்வான் உள்ளிட்ட பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் டேனிஷ் தொடர்பு கொள்ள வைத்தார். செல்போன் தொடர்புகள் வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற ரகசியமான முறையில் உளவுத்தகவல்களை பறிமாறி உள்ளனர். கடந்த 2024 மார்ச் 28 அன்று, பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி இப்தார் விருந்தில் டேனிஷுடன் நட்பாக உரையாடுவதை அவர் பதிவு செய்து, தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். மேலும், இவர் இந்தோனேஷியாவின் பாலிக்கு டேனிஷுடன் பயணம் செய்ததாகவும், இது உளவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.

கடந்தாண்டு காஷ்மீருக்கு சென்ற ஜோதி, அங்குள்ள தால் ஏரி மற்றும் ஸ்ரீநகர்-பனிஹால் ரயில் பாதை குறித்த வீடியோக்களைப் பதிவேற்றி உள்ளார். இவை எல்லாம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது டேனிஷ் போல் மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரியை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி தூதரக அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக அவரை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,’ இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் அல்லது அதிகாரிகள் யாரும் தங்கள் சலுகைகள் மற்றும் அந்தஸ்தை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 8 நாட்களுக்குள் டெல்லியில் உள்ள பாக். உயர் தூதரகத்தில் இருந்து 2 அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாக். அதிகாரியிடம் கெஞ்சிய ஜோதி மல்ஹோத்ரா
கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ரா போலீஸ் காவலில் இருக்கும் நிலையில் அவரது டைரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாக். அதிகாரி டேனிஷிடம், அவர் நெருங்கி பழகியிருக்கிறார். தன்னை திருமணம் செய்யுமாறு கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது நெருக்கமான படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

The post இந்தியர்களை உளவாளிகளாக மாற்றிய விவகாரம் மேலும் ஒரு பாக். அதிகாரி வெளியேற்றம்: ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article