திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம்

1 month ago 9

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம், திருச்சியில் உள்ள பாரதிதாசன் நிர்வாகவியல் பயிற்சி நிலையத்தின் (பிஐஎம்) நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் குழுவைச் சேர்ந்தவர் சண்முகம். 2019ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார். 35 ஆண்டுகளுக்கும் மேல் நிர்வாக திறனை கொண்ட அவர் தலைமைச் செயலாளராக இருந்த பிறகு, மே 2021 வரை தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற சண்முகம் சென்னை பொருளாதார பள்ளியில் ஆய்வு பட்டத்தை பெற்றார்.

கூடுதல் தலைமைச் செயலாளர்- நிதி, முதன்மை செயலாளர்-உணவு மற்றும் பொது விநியோகம் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தார். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியவர். பாரதிதாசன் நிர்வாகவியல் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் அசித் பர்மா கூறுகையில், ‘‘ சண்முகத்தின் வருகை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். சண்முகம் பயிற்சி நிலையத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளதால், திறன் மேம்பாட்டிற்காக, குறிப்பாக நமது மாநிலத்திற்கான பல நீடித்த மற்றும் பொதுக் கொள்கை திட்டங்களை தொடங்க பாரதிதாசன் நிர்வாகவியல் பயிற்சி நிலையம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் இணைந்த முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் appeared first on Dinakaran.

Read Entire Article