ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் விலகல்? ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

3 hours ago 3

பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி வந்தது. புள்ளிப் பட்டியலிலும் தற்போது முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவியதால், ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்சிபி அணிக்கு மற்றொரு பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது. ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளார். அவருக்கு தோள்பட்டையில் காயம் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படாமல் இருந்திருந்தால், அவர் தொடர்ந்து விளையாடி இருக்க முடியும். ஏனெனில், அவருடைய தோள்பட்டை காயம் தற்போது சிறியதாகவே உள்ளது. ஜூன் 11 அன்று துவங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜோஷ் ஹேசல்வுட் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மிகவும் சிறப்பாகப் பந்துவீசி வரும் அவர் இல்லாத நிலையில், ஆர்சிபி அணி நிச்சயம் பந்துவீச்சில் பின்னடைவை சந்திக்கும். இந்த ஆண்டு ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அந்த அணி இந்த ஆண்டு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதாகப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், தற்போது முதல் அடியாக ஜோஷ் ஹேசல்வுட் விலகப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் அந்த அணியில் என்னென்ன பின்னடைவுகள் ஏற்படுமோ என ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனெனில், 2021 ம் ஆண்டும் இதே போலத்தான் நடந்தது. அப்போதும் ஆர்சிபி அணி நன்றாக விளையாடி வந்தது. அப்போது கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2021 ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டபோது, ஆர்சிபி அணி மோசமாக விளையாடி சொதப்பியது. அதேபோல இந்த முறையும் நடக்குமோ என அந்த அணியின் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது ஐபிஎல் தொடர் மே 16 அல்லது 17 அன்று துவங்கும் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 30 அன்று நடைபெறும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிகளைத் துவக்கியிருக்கும். எனவே ஆஸ்திரேலியா வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அப்படியே பங்கேற்றாலும், பிளே ஆப் போட்டிகளின் போது பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

The post ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் விலகல்? ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article