மும்பை: 18வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. 10 அணிகளும் 11 போட்டிகளில் ஆடிய நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு பிசிசிஐ ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் சிலர் தங்கள் நாடுகளுக்கு பறந்த நிலையில் மற்றவர்கள் இந்தியாவில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டு எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.
இதனால் ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வரும் வெள்ளிக்கிழமை முதல் போட்டிகள் ஆரம்பிக்கலாம் என தெரிகிறது. மீதமுள்ள லீக் மற்றும் பிளே ஆப் போட்டிகளை மே 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சென்னை, ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் மட்டும் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மே கடைசி வாரத்தில் பலநாடுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் வெளிநாடு வீரர்கள் சிலர் சென்று விடுவார்கள் என்பதை ஐபிஎல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
12 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இதனை நடத்தி முடிக்க பிசிசிஐக்கு குறைந்தது 2 வாரங்கள் தேவை. ஏனெனில் பிளே-ஆப்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கு குறைந்தது 6 நாட்கள் தேவை. இதனால் தினமும் 2 போட்டிகள் நடத்தி திட்டமிட்டபடி மே 25ம் தேதிக்குள் தொடரை முடிக்கும் ஐடியாவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் தவிர அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை செவ்வாய்க்கிழமைக்குள் ஒன்று திரட்டுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு அவர்களின் பயணத் திட்டங்கள் குறித்து தெரிவிக்குமாறு பிசிசிஐ உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
போட்டிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகலாம் என தகவல் வந்தது. ஆனால் அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால் இன்று மீதமுள்ள போட்டிகள் பற்றிய அட்டவணை வெளியாகும் என பிசிசிஐ வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post 18 வது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது? appeared first on Dinakaran.