
தேனி,
தேனி மாவட்டம் போடியில், பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் மாங்கல்யம் சுற்றி வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்திற்கு கேட்டனர். இதில் போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆறுமுகம் ரூ. 51 ஆயிரத்தி 500 வரை ஏலம் கேட்டார். இறுதியில் பழனியாண்டவர் என்பவர் ரூ. 52 ஆயிரத்திற்கு தேங்காயை எடுத்து சென்றார். ஏலத்தொகைய அறிந்து மெய் சிலிர்த்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
ஆயிரத்தில் தொடங்கிய ஏலத்தொகை ரூ.52 ஆயிரத்தில் நிறைவு பெற்றது. ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.