மீனம்பாக்கம்: புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 5.35 மணிக்கு விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம், திரிசூலம், கிண்டி, மாம்பலம் வழியாக, சென்னை எழும்பூருக்கு காலை 9.30 மணிக்கு வந்து சேரும்.இந்த புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும், மாலை 6.10 மணிக்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, திரிசூலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு இரவு 10.25 மணிக்கு, போய் சேரும். புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னையில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளில் பணிபுரிபவர்கள் புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி- சென்னை- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், காலையில் சென்னைக்கு செல்லும் போதும், மாலையில் புதுச்சேரிக்கு செல்லும்போதும், திரிசூலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நேரம் நின்று செல்லும். இதனால் சென்னை விமான நிலையம், விமான நிலைய கார்கோ உள்ளிட்ட பகுதிகளில், பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டிய ஏராளமான பயணிகள், திரிசூலம் ரயில் நிலையத்தில் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, இறங்கி பயன்படுத்தி வருகின்றனர். புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் மூன்றாவது அல்லது நான்காவது பிளாட்பாரங்களில் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூர் நோக்கி வந்த புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்திற்கு காலை 8.43 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் தாம்பரத்திலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, திரிசூலம் ரயில் நிலையத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. இந்த ரயில் திரிசூலம் ரயில் நிலையத்திற்கு, காலை 8.53 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 8.54 மணிக்கு, திரிசூலத்தில் இருந்து புறப்பட வேண்டும்.
இந்த ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால், திரிசூலத்தில் இறங்க வேண்டிய பயணிகள், தயாராக ரயில் பெட்டிகளின் வாசல்கள் அருகே வந்து நின்றனர். ஆனால் புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திரிசூலத்தில் நிற்காமல், அதிவேகமாக கடந்து சென்றது. இதனால் திரிசூலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்து, கூச்சல், சத்தம் போட்டனர். அதோடு சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்க முயன்றதாகவும், அந்த ரயிலின் கார்டு, அவசரமாக ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு, வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு, திரிசூலத்தில் ரயில் நிற்காமல் செல்வதை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரயில், மீனம்பாக்கத்திற்கு சுமார் 150 மீட்டர் முன்னதாக, திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே நடுவழியில் நின்றது. ஆனால் பிளாட்பாரம் இல்லாமல் நடுவழியில் நின்றதால், பயணிகள் ரயிலில் இருந்து எவ்வாறு இறங்குவது என்று தெரியாமல் தவித்தனர். அதன் பின்பு ரயில் பெட்டி வாசல்களில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய படிக்கட்டுகள் வழியாக, சிரமப்பட்டு கீழே இறங்கினர். வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் போன்றவர்கள் இறங்குவதற்கு நீண்ட சிரமம் பட்டனர்.
கீழே இறங்கிய பயணிகள் ரயில் முன் சென்று இன்ஜின் டிரைவர் மற்றும் ரயிலின் பின்னால் உள்ள பெட்டியில் இருந்த ரயில்வே கார்டு ஆகியோரிடம் வாக்குவாதங்கள் செய்தனர். ஆனால் அவர்கள் பயணிகளின் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல், திரிசூலம் பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து கீழே இறங்கிய பின்பு, ரயில் சுமார் 5 நிமிடம் நின்று விட்டு புறப்பட்டு சென்றது. அதன் பின்பு சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் தண்டவாளங்களில் நடந்து, திரிசூலம் ரயில் நிலையத்திற்கு வந்து, சென்னை விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்றனர்.
The post திரிசூலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் பறந்தது புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்:பயணிகள் கூச்சலால் பரபரப்பு appeared first on Dinakaran.