திரவமானி (Hydrometer)

3 months ago 21

திரவமானி(Hydrometer) என்பது திரவங்களின் ஒப்படர்த்தியைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவைக் குறிப்பது ஒப்படர்த்தி ஆகும். மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அடர்த்தித் திரவங்களில் திரவமானி ஆழமாக மூழ்குகிறது. உப்புக்கரைசல், பால் மற்றும் அமிலங்கள் போன்ற உயர் அடர்த்தித் திரவங்களில் குறைவான ஆழத்தில் மூழ்குகிறது.

திரவமானிகள் பெரும்பாலும் கண்ணாடியாலானவை. நீளமான உருளை வடிவிலான தண்டையும், குடுவை வடிவிலான அடிப்பாகத்தையும் கொண்டுள்ளது. திரவமானியைச் செங்குத்தாக மிதக்க வைக்க, அதன் அடிப்பாகத்தில் பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இக்கருவி ஆர்க்கிமிடீசின் தத்துவமான ‘‘ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அந்தப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம்” என்பதை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது.

இது திரவங்களின் அடர்த்தியை நீரின் அடர்த்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுகிறது. மேலே உள்ள மெல்லிய குழாயில் அளவீடுகள் உள்ளதால், திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்கமுடிகிறது.

சோதிக்க வேண்டிய திரவத்தினைக் கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும். அத்திரவத்தில் திரவமானியை மெதுவாகச் செலுத்தி, மிதக்கும்படி செய்ய வேண்டும். குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தியாகும்.

பல்வேறு நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்றபடி திரவமானிகளை அளவுத்திருத்தம் (calibration) செய்து பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி (Lactometer), சர்க்கரையின் அடர்த்தியைக் கண்டறியும் சர்க்கரைமானி (Saccharometer), சாராயத்தின் அடர்த்தியைக் கணக்கிடும் மதுசாரமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன. இதேபோல் சிறுநீர் பகுப்பாய்விற்காக வடிவமைக்கப்பட்ட மருத்துவத் திரவமானி, அமிலங்களின் ஒப்படர்த்தியை அளவிட அமிலமானி(Acidometer), கடல் நீராவி கொதிகலனுக்கு பயன்படுத்தப்படும் உப்புநீரின் அடர்த்தியை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் உப்புநீர்மானி எனப் பல வகைகளில் திரவமானிகள் பயன்பாட்டில் உள்ளன.

The post திரவமானி (Hydrometer) appeared first on Dinakaran.

Read Entire Article