சென்னை: பொது எதிரியான மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டணி அமைத்த பழனிசாமிக்கு பாராட்டுகள் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்: கடந்த தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை தந்து, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். நீட் ரத்து விஷயத்தில் கபடநாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய்ஜாலத்தை மாணவ, மாணவிகளும், மக்களும் இனியும் நம்ப தயாராக இல்லை. எனவே, மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.