கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் அகைபூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்திருக்கும் பொது கழிவறைச் சுவற்றில், பாகிஸ்தான் தேசியக் கொடியை ஒட்டி, ‘ஹிந்துஸ்தான் முர்தாபாத்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சமூக பதற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தேசிய கொடியை பொதுக் கழிவறை சுவற்றில் ஒட்டிய சந்தன் மாலாகர் (30), பிரோக்யஜித் மொண்டல் (45) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவர். ‘சனாதனி ஏக்தா மஞ்ச்’ என்ற இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கழிவறைச் சுவற்றில் பாகிஸ்தான் கொடியை ஒட்டி, ‘ஹிந்துஸ்தான் முர்தாபாத்’ என்று எழுதியதுடன், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதவும் திட்டமிட்டிருந்தனர். இந்தச் செயல், இந்தியா – வங்கதேசம் எல்லைப் பகுதியான பொன்காவ் பகுதியில், மதவாத பதற்றத்தைத் தூண்டுவதாக அமைந்ததால், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது கழிவறையில் பாகிஸ்தான் கொடியை ஒட்டியதாக வாக்குமூலம் அளித்தனர்’ என்று கூறினர்.
The post பாகிஸ்தான் கொடியை பொது கழிவறையில் ஒட்டிய 2 பேர் கைது: மேற்குவங்க போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.