அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாள பாயிண்ட்டில் போல்டு, நட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி செய்த சம்பவம் தொடர்பாக 500 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர்-திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு இடையே அரிச்சந்திராபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி தண்டவாள பாயிண்ட் பகுதியில் போல்டு நட்டுகள் அகற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், ரயிலை கவிழ்ப்பதற்காக இந்த சதிசெயலில் மர்ம ஆசாமிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் சில தினங்களுக்கு முன் சென்னை அம்பத்தூர்-பட்டரவாக்கம் இடையே மர்ம ஆசாமிகள் தண்டவாள பாயிண்ட்டில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை போட்டுள்ளனர். அதேபோல் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் தண்டவாள பாயிண்ட் இணைப்பில் இரும்புத்துண்டுகள் போட்டு மர்மஆசாமிகள் சதி செய்துள்ளனர்.
அரக்கோணம், சென்னை ரயில் மார்க்கத்தில் அடுத்தடுத்து 3 சதி செயல்களில் மர்மஆசாமிகள் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பாதுகாப்பில் கேள்விக்குறியையும் ஏற்படுத்தியுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 3 சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க ரயில்வே போலீசார் மூலம் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று திருவாலாங்காடு ரயில் நிலைய பகுதியில் ரயில்வே ஐஜி பாபு தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எஸ்பி ஈஸ்வரன், அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் தனிப்படையினர் கலந்து கொண்டனர். அப்போது, திருவாலாங்காடு அருகே பாயிண்ட்டில் போல்டு நட்டுகள் அகற்றிய விவகாரத்தில் விரைந்து விசாரணையை முடிக்கவேண்டும்.
இதில் உள்ளூர் பகுதி நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அல்லது வெளிநபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு ஐஜி உத்தரவிட்டார். மேலும் இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும் நிலையில் சில நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி: இதுவரை 500 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.