சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பெய்த கனமழையால் சங்கரநாராயணசுவாமி கோயிலில் மழைவெள்ளம் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. பிற்பகலில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்பட்டனர். இந்நிலையில் மாலை 4 மணிக்கு பிறகு மேக கூட்டங்கள் திரண்டு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்து சங்கரலிங்கசுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மழை நீருக்குள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘மழை நேரங்களில் எல்லாம் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. கோயிலுக்குள் மழைநீர் வராத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
The post தென்காசி சங்கரன்கோவிலில் கனமழை; சங்கரநாராயணசுவாமி கோயிலில் மழைவெள்ளம் புகுந்தது: முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.