திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சரியாக 11 கிமீ தொலைவில் இருக்கிறது புலியூர் ஊராட்சி. அதற்கு அருகாமை கிராமம்தான் அமுந்தூர் கிராமம். மொத்தம் 35 வீடுகளே இருக்கிற இந்த கிராமத்தில் பெரும்பான்மையான தொழிலே விவசாயம்தான். நெல் முதல் காய்கறி வரை பலவகையான பயிர்கள் சாகுபடி செய்து அந்தப் பகுதியின் விவசாய கிராமமாக இருக்கிறது. அந்த கிராமத்தில்தான் இருக்கிறது முத்துவின் விவசாய பூமி. 5 வகையான கீரைகள் பலவகையான காய்கறிப் பயிர்கள் என முழு நேரமும் விவசாயம் செய்து நேரடியாக விற்பனை செய்து வரும் முத்துவை அவரது தோட்டத்தில் வைத்தே சந்தித்தோம். எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறையாக நாங்கள் விவசாயம்தான் செய்து வருகிறோம். அந்தளவிற்கு பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன் நான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முத்து மேலும் தொடர்ந்தார். நான் ஐடிஐ படித்து வேறு இடத்தில் வேலை பார்த்தபோதும் கூட எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் அதிகம். அதனாலையே, வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்தேன். சிறுவயதில் இருந்தே விவசாயம் தெரிந்த தொழில் தான் என்றாலும்கூட விவசாயத்தில் மேலும் சாதிக்க வேண்டும். வருமானத்தையும் பெருக்க வேண்டும் என யோசித்தேன். அதனால், தினமும் வருமானம் தரக்கூடிய காய்கறிப் பயிர்களை பயிரிடலாமென முடிவெடுத்து தற்போது பல வகையான காய்கறிகள் பயிரிட்டு வருகிறேன்.
எனக்கு இருக்கிற இடம் போக குத்தகைக்கு சிறிது இடம் வாங்கி மொத்தம் 2.5 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். அரைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புளிச்சக்கீரை, பொன்னாங்கன்னி என ஐந்து வகையான கீரைகள் பயிரிட்டிருக்கிறேன். இதுபோக, வெண்டை, காராமணி, கத்தரி, சுரைக்காய் என வேறு சில பயிர்களும் பயிரிட்டிருக்கிறேன். காய்கறிகளில் சீசனுக்கு சீசன் வருமானம் பார்க்கலாம். அதனால், கொஞ்சம் கூடுதலாக சீசன் இல்லாத நேரத்திலும் வருமானம் பார்க்க வேண்டும் என நினைத்து தினமும் கீரைகள் அறுவடை செய்து அதனை தினமும் விற்பனை செய்தும் வருகிறேன்.அதாவது தினமும் எனக்கு கீரைகள் கிடைக்க வேண்டும் என்பதால் தனித்தனி இடத்தில் சுழற்சி முறையில் கீரைகள் பயிரிட்டு வருகிறேன். கீரையைப் பொருத்தவரை விதைத்து 35ல் இருந்து 40வது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். அப்படி அறுவடை ஆகிற கீரைகள் தினமும் பறிக்க வேண்டும் என்பதற்காக வேறுவேறு இடத்தில் வேறுவேறு நாட்களில் கீரை விதைத்து தினமும் அறுவடை செய்து வருகிறேன். கீரையை பொருத்தவரை ஒருமுறை அறுவடை முடித்த இடத்தில் மீண்டும் விதைக்கும்போது நன்றாக அடிஉரம் கொடுத்து மண்ணை நன்றாக வெயிலில் காயவைத்து அதன்பின் நீர் பாய்ச்சி விதை தூவி கீரைகளை வளர்த்து வருகிறேன். இப்படி வளர்கிற கீரைகள் எந்த நோயும் தாக்காத வகையில் சரியான நேரத்தில் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், 10:15 போன்ற உரங்களைக் கொடுத்து வருகிறேன். அது போக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கீரை மற்றும் மற்ற காய்கறிப் பயிர்களை பார்வையிட்டு அதற்கு ஏதாவது நோய் அல்லது பூச்சித்தொல்லை இருந்தால் அதற்கும் உரம் கொடுத்து வருகிறேன். நான் பயோ டைப் முறையில் அதாவது அதிக வீரியம் அல்லாத நஞ்சில்லாத உரங்களை பயன்படுத்தி வருவதால் எனது தோட்டத்தில் விளைகிற கீரை மற்றும் காய்கறிகள் சத்து மிகுந்ததாகவும் சுவையாகவும் இருக்கின்றன. எனது தோட்டத்து காய்கறிகளை வாங்குவதற்காகவே தினசரி வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என மகிழ்கிறார் முத்து.
தொடர்புக்கு
முத்து: 98401 48984
காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிட்டு வருமானம் பார்த்துவரும் விவசாயி முத்து சுழற்சி முறையில் கீரையை சாகுபடி செய்து தினமும் கீரை அறுவடை செய்து வருகிறார். தினமும் 200 கட்டு கீரைகள் வரை அறுவடை செய்து ஒரு கட்டு ரூ.20க்கு விற்பனை செய்து வருகிறார். சராசரியாக ஒரு கட்டு கீரை ரூ.15க்கு விற்பனை செய்தாலும் நாள் ஒன்றிற்கு ரூ3000 வரை வருமானம் பார்க்கிறார்.
காய்கறிகள் போக 50 சென்ட் இடத்தில் தனியாக வாழைத்தோட்டம் வைத்திருக்கிறார் முத்து. வாழை வைத்து ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் கூட, காய்கள் பறித்து விற்பனை செய்தும்கூட அந்த வாழை மரங்களில் இருந்து வாரத்திற்கு 3 கட்டு வாழை இலை அறுத்து விற்பனை செய்கிறார். இது எனக்கு கூடுதல் வருமானம் என மகிழ்கிறார் முத்து.
சென்னை ஆவடியில் உள்ள தினசரி சந்தையில் தனது காய்கறிகளை தினமும் நேரடியாக விற்பனை செய்கிறார் முத்து. அந்த சந்தையில் அன்றன்றைக்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மட்டும் விற்பனை செய்யப்படுவதால் முத்துவும் அவரது காய்கறிகளை நேரடியாக அங்கு விற்பனை செய்கிறார். இதனால், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது என்கிறார்.
The post தினமும் 200 கீரை கட்டுகள்! appeared first on Dinakaran.