திண்டுக்கல், அக். 19: திண்டுக்கல் மாவட்டத்தில் குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மைலாப்பூர், மட்டப்பாறை, கீழ் திப்பம்பட்டி, குஞ்சனம்பட்டி, கசவனம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கன்னிவாடி, கரிசல்பட்டி ஆகிய ஊர்களில் சம்பங்கி பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் சம்பங்கி பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமணம் முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ நாட்களில் மார்க்கெட்டில் ஒரு கிலோ சம்பங்கி ரூ.300க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ சம்பங்கி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து சம்பங்கி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், ‘சம்பங்கி பூ சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு ஆகிறது. ஒரு முறை பயிரிட்டால் 3 ஆண்டு வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் தினசரி 50 கிலோ முதல் 60 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். ஓராண்டுக்கு ரூ.3 லட்சம் வரை பூக்களை விற்கலாம். சாகுபடி செய்ய ரூ.1.5 லட்சம் செலவானாலும், ரூ.1.5 லட்சம் லாபம் கிடைக்கும்’ என்றார்.பாதிக்கு பாதி லாபம் மற்றும் ஒரு முறைக்கு 3 ஆண்டு வரை பலன் கிடைப்பதால் சம்பங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.