ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி மரணமடைந்ததையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தலை கடந்த ஜனவரி 7ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்களிக்க 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
24 மண்டல அதிகாரிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றனர். பின்னர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கடைசி வாகனம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேர்ந்தது.
அதைத்தொடர்ந்து, அங்கு உள்ள ‘ஸ்டிராங் ரூமில்’ வாக்குச்சாவடி வாரியாக இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, தேர்தல் பொதுபார்வையாளர் அஜய்குமார் குப்தா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஸ்ரீகாந்த், ஈரோடு எஸ்பி ஜவகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில், 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல் அடுக்கில் ஸ்ட்ராங் ரூம் பகுதியை சுற்றியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசார், மூன்றாம் அடுக்கில் ஆயுதப்படை போலீசார், நான்காம் அடுக்கில் லோக்கல் போலீசாரும் 24 மணி நேரமும் 3 ஷிப்ட் முறையில் 400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 78 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை (8ம் தேதி) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. இப்பணியில் மொத்தம் 51 பேர் ஈடுபட உள்ளனர். நாளையே இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உள்ளது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.