
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.