
கோட்டா,
மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் பர்ஷாவ்நாத் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். ஞாயிற்று கிழமையான நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில், அதற்கு முன்தினம் இரவு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி மாணவியின் தந்தை சுரேஷ் சிங் சிகர்வால் கூறும்போது, அவருடைய மகள் நன்றாக படித்து வந்தவர் என்றும் 10-ம் வகுப்பு வாரிய தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களை பெற்றார் என்றும் கூறினார். ஆசிரியரான சுரேஷ், மகள் படிப்பதற்காக கோட்டா நகரில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
அதில், அவருடைய குழந்தைகள் தங்கி படித்து வந்துள்ளனர். உடன் சுரேஷின் மனைவியும் உதவிக்கு இருந்திருக்கிறார். சுரேஷ் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
நீட் தேர்வை முன்னிட்டு, கடந்த 4 நாட்களாக மகளுடனேயே ஒன்றாக இருந்திருக்கிறார். மனஅழுத்தத்திற்கான எந்த அறிகுறியும் மகளிடம் காணப்படவில்லை என கூறிய அவர், 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் என கூறினார்.
கடந்த சனிக்கிழமை மாலை பெற்றோர் இருவரும் சந்தைக்கு போன நேரத்தில், அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார் என குன்ஹாதி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் கூறினார். பெற்றோர் வீட்டுக்கு 9 மணியளவில் வந்தபோதே, நடந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. விசாரணைக்கு பின்னரே அதுபற்றி தெரிய வரும் என கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து, கோட்டா நகரில் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் 14-வது சம்பவம் இதுவாகும். கடந்த 30 நாட்களில் இது 4-வது சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு, கோட்டா நகரில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகளில் 17 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.