"தி டோர்" திரை விமர்சனம்

1 month ago 7

சென்னை,

இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'தி டோர்'. ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் ராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியயோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வருண் உன்னி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஜெய்தேவ் இயக்கிய 'தி டோர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கட்டிடக்கலை வடிவமைப்பாளராக பணியாற்றும் பாவனா இன்னொரு பெண்ணுடன் வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த பெண் தூக்கத்தில் எழுந்து நடப்பது, சுவற்றில் முட்டி தன்னைக் காயப்படுத்திக் கொள்வது என்று விநோதமாக நடந்து கொள்கிறார். ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்டிப்படைப்பதாகவும் சொல்கிறார்.

பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கும் பாவனா கண்களுக்கும் ஒரு பெண்ணின் உருவம் தென்பட்டு மறைகிறது. அதோடு அமானுஷ்ய சக்தியையும் உணர்கிறார். அந்த சக்திக்கும், தனக்கும் உள்ள தொடர்பு என்ன என்று பாவனா ஆராய்கிறார். அப்போது சில மர்ம மரணங்கள் நடக்கின்றன. ஆவியாக வருவது யார்? மரணங்களுக்கு என்ன காரணம்? என்பதற்கு விடையாக மீதி கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாவனா நடிப்பில் வந்துள்ள படம். மறைந்த தந்தையின் நினைவுகளில் சோகம், பேயை பார்த்து பதற்றம், அமானுஷ்யத்தின் பின்னணி மர்மத்தை கண்டுபிடிக்கும் தீவிரம் என்று கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப் படுத்தி ஸ்கோர் செய்கிறார் பாவனா. மர்ம மரணங்களுக்கு பின்னணியில் பாவனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டும் கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பு அபாரம்.

பாவனாவுடன் தங்கும் பெண் பீதியை கண்களில் கடத்துகிறார். அமானுஷ்ய ஆராய்ச்சியாளராக வரும் ரமேஷ் ஆறுமுகம், தோழியாக வரும் பிரியா வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு வலுசேர்க்க உதவி உள்ளன. பேயாக மிரட்டி உள்ளார் சங்கீதா. திரைக்கதையை இன்னும் பயமுறுத்தும் வகையில் வடிவமைத்து இருக்கலாம். வருண் உன்னியின் பின்னணி இசை திகிலூட்டி உள்ளது. கவுதம் ஜி.யின் ஒளிப்பதிவு கச்சிதம். பழிவாங்கும் பேய் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி திகில் பட ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் ஜெய்தேவ்.

 

Read Entire Article