ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனு முடித்துவைப்பு-அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

3 hours ago 3

லக்னோ,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர் விக்னேஷ் ஷிஷிர் என்பவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், அவர் கூறியிருந்ததாவது:-

ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இதை நிரூபிக்க தேவையான இங்கிலாந்து அரசின் சில இ-மெயில்களும், ஆவணங்களும் என்னிடம் உள்ளன. எனவே, அவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். எம்.பி. பதவி வகிக்க முடியாது. எனவே, 2024-ம் ஆண்டில் அவர் பெற்ற மக்களவை தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, கடந்த நவம்பர் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதில் அளிக்க அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, ராகுல்காந்தி குடியுரிமை குறித்து இங்கிலாந்து அரசிடம் தகவல் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார். கடந்த 21-ந் தேதி நடந்த விசாரணையின்போதும், அதே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஐகோர்ட்டு, மே 5-ந் தேதிவரை மத்திய அரசுக்கு கால அவகாசம் அளித்தது.

இந்நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ராஜீவ்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  இன்று  இம்மனு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. அதனால் நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-மனுதாரரின் புகாருக்கு தீர்வு காண மத்திய அரசால் எந்த கால வரையறையும் அளிக்க முடியவில்லை. எனவே, மனுவை நிலுவையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை. மனுதாரர் மாற்று வழிமுறைகளை ஆராயலாம்' இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Read Entire Article