மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்; வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 hours ago 2

இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடற்படையினரால், தமிழ்நாட்டின் கடலோர மீனவ மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி வரும் சில பிரச்சனைகள் குறித்தும், அதனை தடுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

1) இந்திய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்:

சமீப காலமாக இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், கடந்த மே 2 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 நாட்டுப் படகுகள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனர் என்றும் அவர்களின் ஜிபிஎஸ் கருவிகள், கைப்பேசிகள், வி.எச்.எப் உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், இயந்திர பாகங்கள், இன்வெர்ட்டர் பேட்டரிகள், அடுப்பு, சுமார் 470 கிலோ மீன்பிடி வலைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற தனிப்பட்ட உடமைகளும் பறிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இதுபோன்ற சம்பவங்ள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், தாக்குதல் நடத்தியவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

2) பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை சேதப்படுத்தாமல் திரும்ப வழங்குதல்:

இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறை (DFAR) பரிந்துரைக்கு ஏற்ப, செயற்கை பவளப்பாறை அமைப்புகளை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 மீன்பிடிப் படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்க உள்ளதாகவும், மீன்பிடி படகுகளை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இதனால் பேரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

3) விடுவிக்கப்பட்ட படகுகளை விரைந்து திரும்ப வழங்க நடவடிக்கை:

05.05.2025 அன்றைய நிலவரப்படி, தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 229 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர் இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 12 மீன்பிடி படகுகளுடன் 101 மீனவர்களையும், 14 மீட்புப் படகுகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கருத்துருவிற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுத்து உதவுமென்று நம்புவதாக தனது கடிதத்தில் குறிட்டுள்ளார்.

இந்த முக்கியப் பிரச்சினைகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதைத் தடுக்கவும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு எழுதியுள்ள கதடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article