புதிதாக திருமணம் செய்பவர்களை நமது மூத்தோர்கள் வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என வாழ்த்துவார்கள். கல்வி, செல்வம், பொருள் உள்ளிட்ட 16 செல்வங்களைத்தான் அவ்வாறு சொல்வார்கள். அதேபோல நாம் விளைவிக்கும் பயிர்கள் நன்றாக வளர்ந்து பலன் கொடுக்க 16 வகையான ஊட்டசத்துக்கள் இன்றியமையாதவையாக உள்ளன. இவ்வாறு பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச் சத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து, மெக்னீசியம் சத்து உள்ளிட்ட சத்துகள் பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகளவில் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் பேரூட்டச் சத்துக்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து, தாமிரச் சத்து, போரான் சத்து போன்றவை பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துகள் பிரிவில் வருகின்றன. மேலும் குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமிணியம் சத்து, சிலிகான் சத்து ஆகியவை பயிர் வளர்ச்சிக்கு மிக மிகக் குறைந்த அளவில் பங்களிக்கின்றன. இந்த சத்துகள் பயிர் விளைவிக்கும் சத்துகள் என அழைக்கப்படுகின்றன.
இந்தச் சத்துகள் ஒவ்வொன்றும் ஒருசில தாவரங்களில் பொதிந்து கிடக்கின்றன. ஆவாரம் இலையில் மணிச்சத்து இருக்கிறது. இது பயிர்களில் மணி பிடிக்க உதவுகிறது. முருங்கை இலை, கருவேப்பிலையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. பூக்கள் நிறைய பிடிக்க இரும்புச்சத்து பங்களிக்கிறது. எருக்கம் இலையில் போரான் சத்து இருக்கிறது. காய், பூ அதிகம் பிடிக்கவும் காய் கோணல் ஆகாமல் இருக்கவும் இந்த சத்து செயல்புரிகிறது. புளியம் இலையில் நிறைந்துள்ள துத்தநாகச் சத்து செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்க உதவுகிறது. மேலும் இது பயிரின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். செம்பருத்தி மற்றும் அவரை இலையில் தாமிர சத்து உள்ளது. இந்தச் சத்து தண்டுப்பகுதி மெலியாமல் பார்த்துக்கொள்ளும். கொளுஞ்சி, தக்கப்பூண்டு ஆகியவற்றில் தழைச்சத்து மிகுந்திருக்கிறது. இது பயிர் செழித்து வளர காரணியாக விளங்குகிறது. விவசாய வயல்களில் கொளுஞ்சி, தக்கப்பூண்டை விதைத்து உழவு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது விவசாயிகள் இன்றும் உணர்ந்து வருகிறார்கள். துத்தி இலையில் உள்ள சுண்ணாம்புச் சத்து, மற்ற சத்துக்களை பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது.
The post தாவரங்களில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துகள்! appeared first on Dinakaran.