சென்னை: ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.