தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப்பகுதியில் நகரின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது அமராவதி ஆறு, உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வரும் சண்முக நதி தண்ணீரும் இணைந்து தாராபுரத்தை கடந்து கரூர் காவிரியில் கலக்கும் ஜீவநதியாக இருந்து வந்த அமராவதி ஆறு தற்போது அங்கு ஆர்வமுடன் குளிப்பதற்காக செல்லும் மனிதர்களை ஜலசமாதி ஆக்கி வருகிறது,
ஆற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது எந்த இடத்தில் தண்ணீரும் தண்ணீருக்குள் அடர்த்தியான சேறுகள் நிறைந்த புதைகுழிகள் எங்கு இருக்கிறது என அறியாத பொதுமக்கள் பலரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்று ஆற்று நீரில் மூழ்கியும், சூழலில் சிக்கியம், புதை குழிக்குள் மூழ்கி தங்களுடைய உயிரை இழந்து வரும் பரிதாப நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு பத்து நபர்களை காவு வாங்கும் அமராவதி ஆற்றில் ஒரு காலத்தில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாவுக்கு செல்வது போல் செல்லும் உள்ளூர் மக்கள் கட்டுச் சோறுகளை கரையில் வைத்து உண்டு மகிழ்ந்து ஆற்றில் குளித்து காலையில் சென்றால் பொழுது சாய வீடு திரும்புவார்கள்.
ஆனால், கடந்த சில வருடங்களாக அமராவதி ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள் கரணம் தவறினால் மரணம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தவறான இடத்தில் கால் வைத்து விட்டால் சேற்று குழிகளுக்குள் புதைந்து உயிரை விடுவதை தவிர தப்பிக்க வழியில்லை, என்ற நிலை நீடித்து வருகிறது. கடந்த ஒரு மாத கால இடைவெளியில் செல்லாத்தாள் (70), சபீர் அஹமது, சண்முகம், காவியா என 4 நபர்களின் உயிரை பறித்துள்ளது, இந்த அமராவதி ஆறு.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி பல்வேறு உபநதிகளாக உருவெடுத்து அமராவதி அணைக்கு வந்து சேரும் அமராவதி ஆற்று நீருடன் கட்டுமான பணிக்கு கட்டமைப்பை தரும் தரமான மணல் அமராவதி ஆறு முழுவதும் பரவிக் கிடந்ததால் மணல் கடத்தும் மர்ம நபர்களுக்கு அமராவதி ஆற்று மணலை தோண்டி எடுத்து விற்பனை செய்து வியாபாரம் செய்யும் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க ஆற்று மணல் முழுவதும் ஆங்காங்கே அபகரிக்கப்பட்டு ஆன் பொருனை நதியென சங்க கால இலக்கியங்களில் புகழப் பெற்ற அமைதியான அமராவதி ஆற்று மணல் திருடப்பட்டதால் அலங்கோல நிலைக்கு தள்ளப்பட்டு மணல் எடுத்த குழிகளுக்குள் சேறும், சகதிகளும் இணைந்து சேர்ந்து புதைக்குழிகளாக மாறிப்போனது தான் வேதனையான சம்பவங்களுக்கு காரணமாகிவிட்டது, என சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.
அமராவதியில் ஓடும் தண்ணீரை பார்த்ததும் அதில் குளிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆழம் தெரியாமல் காலை விடும் அனைவரும் சேற்றுக்குழிக்குள் சிக்கி தங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்கும் சம்பவம் தொடர்கதையாகி விட்டது. அமராவதி ஆற்றில் தொடரும் சோதனையான சோக நிகழ்ச்சிகளை தடுக்க அரசியல் பிரமுகர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆற்றின் கரையோர பகுதிகளில் பலமுறை ஆய்வு செய்தும் ஆற்றுக்குள் அத்துமீறி புகுந்து குளித்து துவைக்கும் பொது மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை யாருமே எடுக்கவில்லை,
அமராவதி ஆற்றுக்கு செல்லும் பகுதிகள் அனைத்திலும் கம்பி வேலிகள் அமைத்து ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் நேரடியாக களமிறங்கினால் மட்டுமே அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் ஓரளவு தடுக்கப்படும், எனவே, ஆண்டுக்கு 10 பேரின் உயிருக்கு உலை வைக்கும் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் கம்பி வேலி அமைக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த உறவினர்களின் கோரிக்கைகளாகவும், சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகவும் இருந்து வருகிறது.
The post தாராபுரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் அமராவதி ஆறு ஆற்று மணலை தோண்டி எடுத்ததால் புதைக்குழியாக மாறும் அவலம்: பாதுகாப்பு வேலி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.