ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலை ஆதரவு திட்டத்தில் உளுந்து நேரடி கொள்முதல்

2 days ago 4

அரியலூர் மே 12: பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி 2024-25-ம் பருவத்தில், 15.03.2025 முதல் 12.06.2025 வரை ஒன்றிய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதன்மை கொள்முதல் நிலையங்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்படவுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு உளுந்து 700 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உளுந்து கிலோ ரூ.74-க்கு (குவிண்டால் ரூ.7,400) ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படவுள்ளது. உளுந்து விளைபொருள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இதர பொருட்கள் கலப்பு 2 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதம், முதிர்ச்சியடையாத பருப்புகள் 3 சதவீதம், வண்டு தாக்கிய பருப்புகள் 4 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் வரையிலான உளுந்தை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பு உரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முன்பதிவு செய்தல் வேண்டும்.

பதிவு செய்யும்போது அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். அழைப்பு வரும் தேதி அன்று விளைபொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்தல் வேண்டும். விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள ஜெயங்கொண்டம் விற்பனைக்கூடத்தின் பொறுப்பாளர்களை 6381388125, 9659317987 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநர்,அரியலூர் மாவட்டம் மற்றும் செயலாளர், பெரம்பலூர் விற்பனைக்குழு ஆகியோரை அணுகலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விலை ஆதரவு திட்டத்தில் உளுந்து நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Read Entire Article