பெரம்பலூர்,மே.12: பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 164வது ஆண்டுப் பெருவிழாவையொட்டி ஆடம்பர தேர்பவனி நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164-வது ஆண்டு பெருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இதனையொட்டி கடந்த 2ம்தேதி வெள்ளிக் கிழமை மாலை பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், கும்ப கோணம் மறைமாவட்ட முதன்மைகுரு அருள்திரு பிலோமின்தாஸ் கலந்து கொண்டு கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்து சிறப்பு திருப்பலி நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், பல்வேறு தலைப்புகளில் வெளியூர்களைச் சேர்ந்த பங்குகுருக்கள் கலந்து கொண்டு மறை உரையாற்றி சிறப்புத் திருப்பலிகளை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தொட்டியம் பங்கு குரு ஆரோக்கியசாமி கலந்து கொண்டு, குடும்பங்களின் சிறந்த பாதுகாவலர் என்றத் தலைப்பில் மறை உரையாற்றி இரவு சப்பரபவனியைத் தொடங்கி வைத்தார். 10ம் தேதி மாலை பெரம்பலூர் மறைவட்ட முதன்மைகுரு அருட்திரு சுவக்கின் கலந்து கொண்டு எளியோரின் ஒளி என்ற தலைப்பில் மறை உரையாற்றி சிறப்புத் திருப்பலியை நடத்தி வைத்தார். இரவு ஆடம்பர தேர் பவனியை பாளையம் பங்கு குரு ஜெயராஜ் தலைமையில், அருட்சகோதரர்கள் சிமியோன், செல்வா ஆகியோர் முன்னிலையில், இறை வார்த்தை சபை குருவான, மண்ணின் மைந்தர் அருட்திரு விக்டர்ரோச் தொடங்கி வைத்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று(11ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை காலை 8:15 மணிக்கு இறைவார்த்தை சபை குருவான, பாளையம் மண்ணின் மைந்தர் விக்டர் ரோச் கலந்து கொண்டு திரு விழா சிறப்புப் பாடல் திருப்பலியை நடத்தி வைத்தார். மாலை 4 மணிக்கு அலங்கார தேர் பவனியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும், நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் பாளையம் மட்டுமன்றி ரெங்கநாதபுரம், பெரம்பலூர், குரும்பலூர், புது நடுவலூர், சத்திரமனை, வேலூர், அரியலூர், லால்குடி, தஞ்சை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானூர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் பங்குகுரு ஜெயா என்கிற ஜெயராஜ் தலைமையில், அருட்சகோதரிகள், காரியஸ் தர்கள், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
The post பெரம்பலூர் பாளையம் கிராமத்தில் யோசேப்பு ஆலய 164வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி appeared first on Dinakaran.