பெரம்பலூர்,மே.12: வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க் கடுப்புக்கு அருமருந்தான பதநீர் விற்பனை… பெரம்பலூரில் வாங்கி பருகுவோர் வாடிக்கையாளராகும் அதிசயம். பதனி எனப்படும் பதநீர் பனை மரத்தில் இருந்து கிடைக்கின்ற பானமாகும். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர் எனப் படுகிறது. உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.
சுண்ணாம்பு சேர்க்கப் படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு. பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட பதநீர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு தலைமை மருத்துவ மனைக்கும் இடையே உள்ள சாலையில், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே தினமும் விற்கப்பட்டு வருகிறது. பதநீர் ஒரு சிறிய குவளையில் ரூ.30க்கும், பதநீருடன் 3 உடைக்கப்பட்ட நுங்குகளும் கலந்து ரூ.60க்கும் விற்கப் படுகிறது. இதனை தினமும் காலையில் அவ்வழியே வாக்கிங் செல்வோரும், பள்ளி ஆசிரியர்களும், கடை உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் வாங்கிப் பருகிச் செல்கின்றனர். மிகுந்த சுவையாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ள இந்த பதனியை வாங்கிக் குடிப்போர் தொடர்ந்து அதனை ஒவ்வொரு நாளும் அதே நேரம் தவறாமல் வந்து வாங்கிப்பருகி இங்கு வாடிக்கையாளராகி விடுகின்றனர்.
இதனால் தினமும் 50 லிட்டர் பதனி விற்கப்பட்டு பெரம்பலூரில் பதனி விற்பனை விறுவிறுப்படைந்து வருகிறது.
The post பெரம்பலூர் உடல் சூட்டை தனிக்கும் பதநீர் விற்பனை படுஜோர்: மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.