
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எலமடுவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (35 வயது). இவர் தனது தாய் சுஜாதாவுடன் (58 வயது) வசித்து வந்தார். சுஜாதா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்துள்ளார். மேலும் அவர்கள் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சித், சுஜாதா இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இருவரும் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். பின்னர் ரஞ்சித் சால்வையால் அவரது தாயின் கழுத்தை நெரித்துள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஞ்சித் உயிரிழந்த நிலையில், சுஜாதா பிழைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் மின் கட்டணம் செலுத்தாதது குறித்து கேட்க வந்த, கேரள மின்சார வாரிய அதிகாரிகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த சுஜாதாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.