
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார்.
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
இதையடுத்து, இந்திய சீனியர் வீரரான விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரோகித் ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் தனக்கு அளிக்கும்படி பி.சி.சி.ஐ-யிடம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதால் அதற்கு புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்ததாகவும், இதன் காரணமாக விராட் கோலியின் கோரிக்கையை பி.சி.சி.ஐ நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.