தாக்குதல் சம்பவம்: டெல்லி வந்தடைந்த தமிழ்நாடு கபடி வீராங்கனைகள்

2 weeks ago 2

புதுடெல்லி,

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இந்த போட்டி தொடரில் நேற்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது.

அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின் போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர்.

இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால், விளையாட்டு களம் பரபரப்பானது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. தேசிய அளவிலான கபடி போட்டியில் பல்கலைக்கழக அணி மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்-அமைச்சர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்ததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று இரவு தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article