
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விழா அரங்கிற்குள் விஜய் காலை 10 மணியளவில் வருவார் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் தவெகவை சேர்ந்த 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விஜய் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள காமராஜர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டவர்களின் வாரிசுகளும், இரட்டை மலை சீனிவாசனின் வாரிசுகளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பா.ஜனதாவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட பிரபலங்களும், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக இணைய உள்ளவர்கள் பட்டியலில் உள்ள பிரபலங்கள் யார்? என்ற தகவலை அக்கட்சி தலைமை ரகசியமாக வைத்துள்ளது. தவெகவில் இணையும் பிரபலங்களை வரவேற்று விழாவில் விஜய் பேச உள்ளார்.
விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை அவர் அறிவித்தார். அதுபோல் அவர் இந்த விழாவில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கிய தனது சுற்றுப்பயணம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், வலியுறுத்தியும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் சென்னை வந்தார். இந்த விழாவில் அவர் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து த.வெ.க. நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார். எனவே தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.