
கோவை மாவட்டம் துடியலூர் ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37 வயது). இவர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் கிறிஸ்தவ மதபோதகராக உள்ளார். ஜான் ஜெபராஜின் மாமனார் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்பு மதபோதகர், தனது வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவரது மாமனார் தத்தெடுத்து வளர்க்கும் 17 வயது சிறுமியையும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமியையும் அந்த நிகழ்ச்சிக்கு ஜான் ஜெபராஜ் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. விருந்து நிகழ்ச்சியின்போது, 2 சிறுமிகளுக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனை யாரிடமும் கூறக்கூடாது என்றும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஜான் ஜெபராஜின் பக்கத்து வீட்டு சிறுமி, அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகள் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கோவை மாநகர போலீசார் சார்பில், அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன்; விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜான் ஜெபராஜின் மனுவை சென்னை ஐகோர்ட்டு விரைவில் விசாரிக்கிறது.