மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2-வது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்

1 day ago 1

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 7.4.2023 அன்று நடந்த தீமிதி திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி ஒருகால பூஜை அர்ச்சகர் அய்யப்பன் மூலம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையே தொடர்ந்து 11 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும், சாமி தரிசனம் செய்ய செல்பவர்களை தடுத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று அதிகாலை 5.35 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர். மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.இதில் ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கோவில் மீண்டும் மூடப்பட்டது. மேலும் கிராமத்தில் பதற்றமான சூழல் காணப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலர்கள், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் (வெள்ளிக்கிழமை) இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை 2வது நாளாக திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு கோவில் அர்ச்சகர் மோகன் பூஜைகளை செய்தார்.

இதையடுத்து மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் கோவிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை. மூன்று சிறுவர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.அதே நேரத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறையினர், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோவில் மீண்டும் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை நேரத்தில் 5 மணி முதல் 6 மணி வரை கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான 2 ஏடிஎஸ்பிகள், ஒரு ஏ.எஸ்.பி. 6 டி.எஸ்.பி.க்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 25 காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் முதல் காவலர்கள் நிலையில் 320 பேர் என போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read Entire Article