வாலாஜாபாத்: வீடு கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் (30) வீட்டுமனை வாங்கி வீடு கட்டுவதற்காக கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்து வாலாஜாபாத்தில் உள்ள மின்வாரிய ஊரகப்பிரிவு அலுவலகத்தை அணுகி உள்ளார்.
அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமார் (48) தற்காலிக மின் இணைப்பு கேட்டு வந்த மணிகண்டனிடம் மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலனுக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார். இதை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் தர விரும்பாத மணிகண்டன் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து மணிகண்டனை அனுப்பி வைத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்ட மணிகண்டன் நேற்று மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து, வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமாரை அணுகிய நிலையில் அவர் உதவி பொறியாளர் பூபாலனிடம் அழைத்துச் சென்று பணத்தை வழங்கி உள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அதிரடியாக மின்வாரிய அலுவலகத்தில் நுழைந்து லஞ்ச பணத்தைப் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலன், வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் திடீர் நடவடிக்கையால் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
The post தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் அதிரடி கைது: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.