தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

1 week ago 6

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் ஸ்ரீராம நவமி திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்திய நாராயணன், மச்ச, கஜேந்திர மோட்சம், ஸ்ரீசேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம், பிருந்தாவனம், பார்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நடத்தப் பட்டது.

தொடர்ந்து சுவாமிக்கு நவமி அபிஷேகமும், ஸ்ரீ ராமர் அவதார அலங்கார சேவையும் நடந்தது. நேற்று மேள தாளங்கள் முழங்க வரிசை அழைப்பும், கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவின் முக்கிய நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனைகளும் செய்யப்பட்டது. இவ்விழாவில் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) பல்லக்கு உற்சவமும், 14ம் தேதி (திங்கட்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், ராமநவமி விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

The post தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article