*பிளேடு காண்பித்து மிரட்டியதால் பரபரப்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பையர்நாக்கன்பட்டி மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி வசிக்கின்றனர். தற்போது வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கி உள்ள நிலையில், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, முறையாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி, வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நேற்று அப்பகுதி பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், குழந்தைகளுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு பெண் பிளேடு வைத்துக் கொண்டு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் கையில் அறுத்துக்கொள்வதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனால், நெருங்க பயந்த போலீசார், அவரை சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து அவரிடமிருந்து பிளேடை பறிமுதல் செய்தனர். அப்போது, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் வருவாய்த்துறையினர் அலைக்கழித்து வருவதால், அரசின் எந்த சலுகையும் பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை இணையதளத்தில் ஏற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் முன் வீட்டுமனை பட்டாவை பதிவேற்றம் செய்யக்கோரி பெண்கள் தர்ணா appeared first on Dinakaran.