பயறு வகைப் பயிர்களில் அதிக புரதம், அதிக பயன்பாடு, அதிக கலோரிச்சத்து கொண்டது உளுந்து. குறுகிய காலப் பயிர் என்பதால் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தரமான உளுந்து விதைக்காக நல்ல விலைக்கு விற்கப்படுவதால் வேளாண்மைத் துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து விதைச் சான்று நடைமுறைகளைக் கையாண்டு நல்ல லாபம் ஈட்டலாம். இத்தகைய உளுந்தை நேர்த்தியாக விதைத்து, அதிக மகசூல் பெற சில டிப்ஸ்களைத் தருகிறார் தர்மபுரி மாவட்ட வேளாண் துறை அலுவலர் வி.குணசேகரன். நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்றால் தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். தரமான விதையானது இனத்தூய்மை மிக்கது. பிற ரகங்கள் மற்றும் பிற பயிர் விதைகள் கலவாதது. பூச்சி, நோய் தாக்காத விதைகளாக இருக்கும். தரமான விதைகள் அதிக முளைப்புத்திறனுடன், சீரான முளைப்புத் திறனுடன் இருப்பதால் மிக நன்றாக வளர்ந்து அதிக மகசூல் தரும்.
நிலத்தேர்வு: உளுந்து விதைப்பண்ணை அமைக்க உள்ள வயலில் ஏற்கனவே உளுந்து சாகுபடி செய்திருக்கக் கூடாது. ஏனென்றால் முந்தைய பயிரின் விதை இப்போது சாகுபடி செய்ய உள்ள பயிரின் விதையுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. வடிகால் வசதியுள்ள நல்ல நிலமாக இருப்பது அவசியம்.
பயிர் விலகு தூரம்: உளுந்து ஒரு தன் மகரந்தச் சேர்க்கை பயிர். இருப்பினும் தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை நடக்க வாய்ப்பு உள்ளது. இனக்கலப்பினை தவிர்க்க வயலைச்சுற்றி குறைந்தது 5 மீட்டர் அளவிற்கு சான்று நிலைக்கும், 10 மீட்டர் ஆதார நிலைக்கும், இதர உளுந்து பயிர்கள் இருக்ககூடாது. இதற்கு வயலின் ஓரம் 4-5 வரிசைகள் பச்சைப்பயிரினை விதைத்து பின் உளுந்து பயிரை விதைக்கலாம்.
பருவம்: விதைகள் முற்றும்போது அதிக மழை மற்றும் வெயில் இல்லாமல் இருக்க வேண்டும். எனவே ஆடி மற்றும் மாசிப்பட்டம் மிகவும் உகந்தது.நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். முதலில் உளிக்கலப்பை கொண்டு உழவு செய்தால் மண்ணின் அடியில் உள்ள கெட்டியான படுக்கை உடையும். இதனால் மண்ணின் நீர் கொள்ளும் திறன் அதிகரிக்கும், மேலும் வேர்கள் நன்கு வளரும். பின் 5 கலப்பையில் ஒரு சாலும், 12 கலப்பையில் ஒரு சாலும் உழவு செய்தால் மண் பொலபொலவென்று இருக்கும். நிலத்தில் 1 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து நடவு மேற்கொள்ளலாம்.ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இடுவது அவசியமாகிறது. பின்னர் 20 கிலோ யூரியா, சூப்பர் 50 கிலோ அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடுவது அவசியம். விதைத்த உடன் 5 கிலோ பயறு வகைகளுக்கான நுண்ணூட்டத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். இதனால் நுண்ணூட்ட பற்றாக்குறை ஏற்படாமல் பயிர் மகசூல் கூடும்.
விதைத்தேர்வு: விதைப்பண்ணை அமைக்க தரமான சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற வல்லுநர் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைப் பண்ணைகளை அமைக்கலாம்.
ரகத்தேர்வு: கோ 4, கோ5, கேஎம்2, வம்பன் 1, டி9, எடிடி2, எடிடி3, எடிடி5, வம்பன் 3 போன்ற ரகங்கள் உள்ளது. இதில் டிஎம்வி1, வம்பன் 3 போன்ற ரகங்கள் தற்போது விவசாயிகளிடையே பிரபலம். மற்ற ரகங்களும் மாவட்டத்திற்கேற்ப, பயிரிடும் பருவத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக அனைத்து ரகங்களும் விதைத்த 30-35வது நாளில் பூக்க ஆரம்பிக்கிறது. அதிகபட்சமாக 70-75 நாளில் அறுவடைக்கு வரும். அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
விதையளவு: ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். விதைகள் திரட்சியாக இருக்க வேண்டும். சுருங்கிய சிறிய விதைகளை சலித்து எடுத்து விட வேண்டும். புதிய விதைகளாக இருந்தால் கடின விதைகளாக இருக்கும், இவை தண்ணீரை உறிஞ்சாது. இதனால் விதைக்கும் போது வயலில் முளைப்புத் திறன் பாதிக்கும்.கடின விதைகள் 10 சதத்திற்கும் மேலாக இருக்கும் பட்சத்தில், உடனே விதைக்க வேண்டியிருந்தால் அமில விதை நேர்த்தி செய்தால் விதையின் மேல் தோல் மிருதுவாகி நீர் உறிய ஆரம்பிக்கும். இதற்கு ஒரு கிலோ விதைக்கு 100 மிலி அடர் கந்தக அமிலம் ஒரு பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி ஓரிரு நிமிடங்கள் விதையினை நன்றாக கலக்கி பின்னர் தண்ணீர் பலமுறை ஊற்றி நன்கு கழுவி உலர வைத்து பயன்படுத்தலாம். வெளிறிய நிறத்துடன் காணப்படும் நோய் தாக்கிய விதைகளினால் வயலில் உள்ள மற்ற செடிகளுக்கு நோய்கள் ஏற்படும். இது போன்ற விதைகளையும் பொறுக்கி எடுத்து விட வேண்டும்.பூசனக்கொல்லி விதைநேர்த்தி தரமான விதையினை பிரித்தெடுத்த பின்னர் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்க பூசனக்கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்வது அவசியம். இதற்கு ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது பவிஸ்டின் அல்லது திரம் 2 கிராம் கலந்து வைத்து பின்னர் 24 மணி நேரம் சுழித்து நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…)
The post தரமான உளுந்து விதை உற்பத்திக்கு சில வழிமுறைகள்! appeared first on Dinakaran.