வெள்ளை சாமந்தியில் வேற லெவல் வருமானம்! : பட்டதாரி இளைஞரின் சக்சஸ் கதை

3 hours ago 3

“என்னோட அப்பா, அம்மா விவசாயக் கூலி வேலை செய்வாங்க. அதுல கூட போதுமான வருமானம் கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ நாங்க வருசத்துக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்குறோம். அப்பா, அம்மா, தம்பின்னு எல்லோரும் சந்தோசமா இருக்கோம். இதுக்கெல்லாம் காரணம் இந்த பாலிஹவுஸ் விவசாயம்தான்’’ என கன்னடம் கலந்த தமிழில் பேசியவாறு தனது பாலிஹவுஸைக் காண்பிக்கிறார் ஆனந்த். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சூளகிரி பகுதிகளில் தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளும் புழங்கும். மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்தித்துக்கொள்ளும் பகுதி என்பதால் இங்கு இப்படியொரு மொழிக்கலப்பு இருக்கும். இந்த 3 மொழிகளைப் பேசும் இந்த ஊர்களில் உள்ள விவசாயிகள் இப்போது ஒவ்வொரு படியாக ஏறி முன்னேறி வருகிறார்கள். தங்கள் உழைப்பாலும், விவசாயம் சார்ந்த ஆர்வத்தினாலும் பாலிஹவுஸ் அமைத்து குடை மிளகாய், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளில் இருந்து ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட மலர்ப்பயிர்கள் வரை கலக்கலாக சாகுபடி செய்து கை நிறைய வருமானம் பார்க்கிறார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார் நாம் சந்தித்த ஆனந்த். ஓசூர் – கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி சாலையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திமுகம் செட்டிப்பள்ளி பகுதியில் தனது 1.7 ஏக்கரில் பாலிஹவுஸ் அமைத்து பல்வேறு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இப்போது வெண் சாமந்தியைப் பயிரிட்டு வரும் இவர் லட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார். இதற்காக இவர் பயணித்த கதையையும், வெற்றி பெற்ற கதையையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“காலேஜ் படிச்சிட்டு பெங்களூர்ல ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். ஒருகட்டத்தில எனக்கு வேலை பிடிக்கலை. அப்ப நான் யூடியூப்ல விவசாயம் தொடர்பான வீடியோக்களை பார்ப்பேன். இஸ்ரேல் தொழில்நுட்பத்துல தண்ணியை கம்மியா பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்குற டெக்னிக் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துச்சி. பாலிஹவுஸ் பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு நம்பிக்கையோடு வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எங்களுக்கு இருக்குற 1.7 ஏக்கர் நிலத்துல அப்பா, அம்மா கேழ்வரகு போன்ற சில பயிர்களைப் போடுவாங்க. இதுல புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அந்த சமயத்துல சூளகிரியில் இருக்குற வேளாண் துறை அதிகாரி ஆறுமுகம் சாரும், எங்க ஊருல இருக்குற வெங்கடாசலம் சாரும் எனக்கு பாலிஹவுஸ் விவசாயம் பத்தி விளக்கமா சொன்னாங்க. நானும் அங்க இங்கன்னு புரட்டி 2018ல பாலிஹவுஸ் போட்டுட்டேன். ஆரம்பத்துல கலர் கேப்சிகம் (குடை மிளகாய்), செர்ரி தக்காளி, குக்கும்பர்னு விவசாயம் பண்ணேன். அதுல நல்ல லாபம். அதுக்கப்புறம் ரோஸ், ஜெர்பரா போட்டேன். அதுலயும் நல்ல லாபம். போன வருசம் நவம்பர் மாசம் வெள்ளை சாமந்தியைப் பயிர் பண்ண ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் அது மகசூல் தருது. நல்ல லாபமும் தருது’’ என்றவரிடம் வெள்ளை சாமந்தி சாகுபடி குறித்து கேட்டோம்.

“வெள்ளை சாமந்தியைப் பயிர் செய்ய முதல்ல நிலத்துல 3 லாரி மாட்டு எரு போட்டு, அதுக்கப்புறம் 100 கிலோ டிஏபி, 100 கிலோ 10.26, 10 கிலோ ஹியூமிக் ஆசிட் உரம் போட்டோம். அப்புறம் 4 அடிக்கு ஒரு பார் எடுத்து, அந்த பார்ல டிரிப் குழாய் போட்டோம். ஒரு நாளைக்கு முன்னாடி பாசனம் பண்ணி, 1 அடிக்கு 1 செடின்னு நடவு பண்ணோம். நடவுக்குத் தேவையான நாற்றுகளை பெங்களூர்ல இருந்து வாங்கிட்டு வந்தோம். நடவுக்கு மொத்தமா 16 ஆயிரம் செடி தேவைப்பட்டுச்சி. நட்ட பிறகு ஜக்குல தண்ணி பிடிச்சி நாற்று மேல தெளிப்போம். பாசனம் செஞ்சா வேர்கள் சேதமாகிடும். 10 நாள் கழிச்சி லிக்யூர் ஹியூமிக் ஆசிட்டை சொட்டுநீர்ல கலந்து வேரில் விடுவோம். 15 நாள்ல 19:19:19 உரத்தை 15-20 கிலோ அளவுல டிரிப்ல கலந்து கொடுப்போம். 15வது நாள்ல தைமேக்ஸ் மருந்தை 1 லிட்டருக்கு 1 கிராம்னு கலந்து தெளிப்போம். அதேபோல இமிடால் மருந்தை அதே அளவுல தெளிப்போம். இதுமட்டுமில்லாம ஏதாவது ஒரு வளர்ச்சியூக்கியையும் தெளிப்போம். இந்த மருந்துகளை 10 நாளுக்கு ஒருமுறை தெளிப்போம். அப்போதான் பூச்சி தாக்குதல் இல்லாமல் செடிகள் நல்லா செழிப்பா வளரும்.

25வது நாள்ல செடியோட தலைப்பகுதியை கிள்ளிவிடுவோம். இப்படி பண்ணா செடிகள் உயரமா வளராம பக்கக்கிளைகள் எடுத்து படர்ந்து வளரும். இதேமாதிரி 40வது நாள்லயும் தலை கிள்ளுவோம். இதுமாதிரி செய்றதால் 10-15 பக்கக்கிளைகள் வரும். 30வது நாள்ல 12:61 உரத்தை 20 கிலோ அளவுக்கு டிரிப்ல கொடுப்போம். இப்படி பராமரிப்பு வேலைகளை பார்த்து பார்த்து செஞ்சிக்கிட்டு வந்தோம்னா 84-90 நாள்ல முதல் அறுவடையை எடுக்கலாம். முதல் அறுவடையில 3-4 டன் பூக்கள் கிடைக்கும். 2வது அறுவடையில 2-3 டன் பூக்கள் கிடைக்கும். 3வது அறுவடையில 2 டன் கிடைக்கும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மகசூல் குறைய ஆரம்பிக்கும். எப்படியும் 6-8 மாசம் செடிகள் பூ கொடுத்துக்கிட்டு இருக்கும். ஒரு ஏக்கர்ல குறைஞ்சது 10 டன் பூக்கள் மகசூலா கிடைக்கும். 100 ரூபாய்ல ஆரம்பிச்சி 900 ரூபாய் வரைக்கும் ஒரு கிலோ பூவுக்கு விலை கிடைக்கும். குறைஞ்சபட்சமா 100 ரூபாய்னு கணக்கு பண்ணா கூட ரூ.10 லட்சம் வருமானமா கிடைக்கும். இதுல அதிகபட்சமா 3 லட்சம் வரைக்கும் செலவாகும். மீதி 7 லட்சம் லாபமா கிடைக்கும். பாலிஹவுஸ் அமைக்க எனக்கு 27 லட்சம் செலவாச்சி. அதுல 16 லட்சம் மானியம் கிடைக்கும். பாலிஹவுஸ்க்காக நான் செலவு பண்ண தொகையை நான் 2 வருசத்துல எடுத்துட்டேன். அதுக்கப்புறம் பராமரிப்பு செலவு போக நல்ல லாபத்தைத் தொடர்ச்சியா எடுக்குறோம்’’ மகிழ்ச்சி பொங்க கூறி முடித்தார்.
தொடர்புக்கு: ஆனந்த்: 81972 90375.

வெள்ளை சாமந்தி நாற்றுகளை நடும்போது 10 வாட்ஸ் பல்பை 10 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் வைத்து, இரவு நேரத்தில் மட்டும் எரியச்செய்ய வேண்டும். இதை 40 நாட்களுக்கு பின்பற்றி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செடிகள் ெசழித்து வளருவதோடு, பூக்கள் ஒரே சீராக பூத்து அறுவடைக்கு வரும்.

வெள்ளை சாமந்தியில் 2 விதமான அறுவடை நடைபெறுகிறது. பூக்களைத் தனியாக பறிப்பது ஒரு வகை. கொய்மலராக கொத்தாக பறிப்பது ஒரு வகை. இதில் எந்த விதமான பூக்களுக்கு விலை கிடைக்கிறதோ, அதற்கேற்றவாறு அறுவடை செய்கிறார்கள்.

 

The post வெள்ளை சாமந்தியில் வேற லெவல் வருமானம்! : பட்டதாரி இளைஞரின் சக்சஸ் கதை appeared first on Dinakaran.

Read Entire Article