உலகம் முழுவதும் கடல் உணவுகளுக்கான சந்தை பெரிய அளவில் இயங்கி வருகிறது. குறிப்பாக சிங்கி இறால்களுக்கான சந்தை குறிப்பிடத்தக்க அளவில் இயங்கி வருகிறது. பல நாடுகளில் ஏற்றுமதி சந்தை வாய்ப்பு கொண்ட இந்த சிங்கி இறால்களின் வகைகள், வளர்ப்பு முறைகள் குறித்து விளக்குகிறார் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ்.ஏற்றுமதி வாய்ப்பும், உயர் மதிப்பும் கொண்ட கடல் உணவு வகைகளில் சிங்கி இறால்கள் முக்கியமான இடத்தில் உள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை 2007ம் ஆண்டில் சிங்கி இறால்களின் இறக்குமதி 1539 டன்னாக இருந்தது. 1990ம் ஆண்டில் 2200 டன் என இருந்தது. இன்றும் இதன் தேவை இந்தியாவில் அதிகளவில் உள்ளது.
சிங்கி இறால்கள் வெவ்வேறு வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக உறைந்த இறால்கள், முழு உறைந்த, முழு குளிரூட்டப்பட்ட, முழு சமைத்த இறால்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் புதுவிதமான கடல் உணவுகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கி இறால்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. இத்தகைய சிங்கி இறால்கள் கடலில் இருந்து பிடிக்கப்பட்டு, கரைக்குக் கொண்டுவரப்படுகிறது. பின்பு கரையில் கூண்டு அமைத்து, கொழுப்பேற்றப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இறால் இறங்கும் மையங்கள்
மும்பையில் உள்ள வெராவல், கேரளத்தின் கோழிக்கோடு, தமிழகத்தில் கன்னியாகுமரி (குளச்சல்), ராமேஸ்வரம் (மண்டபம்), தூத்துக்குடி மற்றும் சென்னையில் உள்ள கடல் பகுதியில் சிங்கி இறால்கள் பிடிக்கப்படுகின்றன. அவை சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உலகளவில் கனடாவும் அமெரிக்காவும் சிங்கி இறால்கள் ஏற்றுமதியில் முதல் இடத்தை வகிக்கின்றன.
சிங்கி இறால்களின்சில வகைகள்
பானுலிரஸ் ஹோமரஸ் சிங்கி இறால் (லின்னேயஸ்)
*பானுலிரஸ் ஹோமரஸ் என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் ஓரங்களில் வாழும் ஸ்பைனி லாப்ஸ்டர் இனமாகும்.
*இது ஆழமற்ற நீரில் வாழும் தன்மை கொண்டது. பழுப்பு நிற மஸ்ஸல் பெர்னா பெர்னாவை உணவாக உண்ணும்.
*20-25 செமீ (7.9-9.8 அங்குலம்) நீளம் வரை வளரும்.
* இந்த இனம் கேரளாவில் கோழிக்கோடு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் கடலோரப் பகுதிகளிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மண்டபம் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.பானுலிரஸ் ஹோமரஸ் பொதுவாக 1-5 மீட்டர் (3 அடி 3 இல் 16 அடி 5 அங்குலம்) ஆழம் கொண்ட மற்றும் ஆழமற்ற நீரிலும், சர்ஃப் மண்டலத்தில் உள்ள பாறைகளிலும் எப்போதாவது 90 மீ (300 அடி) வரை ஆழம் கொண்ட நீரிலும், கொந்தளிப்பான நீரிலும் வாழ்கிறது.
வாழ்விடம் மற்றும்சில சிறப்பியல்புகள்
*பானுலிரஸ் ஹோமரஸ் சிங்கி இறால்கள் பாறைகளில்தான் பொதுவாக வசிக்கும். கடலோர விளிம்புப் பாறைகள் இவற்றுக்கு மிகவும் பிடித்தமான வாழ்விடம்.
* இவை சிறிய ஓட்டுமீன்கள், மொல்லஸ்கள், புழுக்கள் மற்றும் பாசிகளை உண்ணும். இது ஒரு இரவு நேர வாழ்வி உயிரினம் ஆகும். பொதுவாக சிங்கி இறால்களின் அளவு சுமார் 300 முதல் 500 கிராம் இருக்கும்போது (சுமார் 12 மாதங்களில்) முதிர்ச்சியடைகிறது.
* ஒவ்வொரு பெண் சிங்கி இறால்களும் ஒவ்வொரு முறை முட்டையிடும்போது 1,20,544 – 4,49,585 முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கிட்டத்தட்ட 85.7% லார்வாக்களை வெளியிடுகின்றன, மேலும் ஒரு வருடத்தில் 3-4 முறை முட்டையிடும்.
* முட்டையை அடைகாக்க 24-27 நாட்கள் ஆகும். இரவு நேரத்தில் குஞ்சு பொரிக்கும். அப்போது முதல் நிலை பைலோசோமா லார்வாக்கள் வெளியிடப்படுகின்றன.
* பைலோசோமா லார்வாக்கள் 11 தனித்தனி நிலைகளில் உருவாகிறது. இது 25 மிமீக்கு குறைவான நீளம் கொண்டது.
* இறுதி நிலை லார்வாக்கள் தானாக நீந்தக்கூடியதாகவும், கண்ணாடி போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும். இந்த நிலை 2-3 வாரங்கள் நீடிக்கும். அப்போது லார்வாக்கள் நிறமடைந்து பொருத்தமான வாழ்விடத்தைக் கண்டறியும். இதைத் தொடர்ந்து, லார்வாக்கள் கடலின் அடி மட்டத்தில் வாழும்.
அதிகபட்சமாக பதிவுசெய்யப்பட்ட மொத்த நீளம் 31 செ.மீ. கேரபேஸ் நீளம் 12 செ.மீ. இந்திய மீன்பிடிப்பில் சிங்கி இறால்களின் சராசரி நீளம் 20 முதல் 25 செ.மீ. ஆகும்.
பானுலிரஸ் ஆர்னடஸ்
* இது நீல-பச்சை காராபேஸ் மற்றும் மஞ்சள்-சிவப்பு முள்ளெலும்புகளுடன் காணப்படும்.
* இதன் வெளிப்புறமானது சிக்கலான கோடுகள் மற்றும் பல்வேறு வண்ண புள்ளிகளால் வகைப்படுத்தப்படுகிறது. வயிற்றுப்பகுதி மென்மையாகவும், வெள்ளைக் கோடுகள் இல்லாமலும் உள்ளன.
*கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பாறைகள் கொண்ட கடலோரப் பகுதிகளிலும், கேரளாவில் கோழிக்கோடு, கொல்லம், திருவனந்தபுரம் கடலோரப் பகுதியிலும் இந்த இனங்கள் காணப்படுகின்றன.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…)
தொடர்புக்கு: முனைவர்
விஜய் அமிர்தராஜ் 99944 50248.
The post ஏற்றுமதிக்கு உகந்த சிங்கி இறால்கள்! appeared first on Dinakaran.