பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை விதித்த மத்திய அரசு

13 hours ago 2

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து அனைத்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய நலன் மற்றும் பொது கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை (FTP) 2023-ல் "பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை" என்ற தலைப்பின் கீழ் புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வரும் அனைத்து பொருட்களின் இறக்குமதியும் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 447.65 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி வர்த்தகம் நிகழ்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் இறக்குமதி வர்த்தகம் 0.42 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பழங்கள், விதைகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பினரும் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கனிம தாது உள்ளிட்ட அனைத்து பொருட்களுமான இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்தியா உயர்த்தியது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட MFN (மிகவும் விரும்பப்படும் நாடு) அந்தஸ்தையும் இந்தியா திரும்பப் பெற்றது.

இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை மற்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article