சிவகங்கை, பிப்.24: தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பூச்சிக் கொல்லி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் அவைகளின் தரத்தினை உறுதிப்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின் அடிப்படையில் வட்டார அளவிலான பூச்சிக்கொல்லி ஆய்வாளர்கள் மூலம் கடைகளில் மாதிரிகளை சேகரித்து தேனி மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி ஆய்வக குறியீட்டு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. குறியீடு வழங்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூச்சிக்கொல்லி பரிசோதனை நிலையத்திற்கு தர ஆய்வுக்காக பெறப்படுகிறது. தர நிலைகளை உறுதிப்படுத்துவதற்காக அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
30 தினங்களுக்குள் தரம் மற்றும் தரமற்ற மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கும் பட்சத்தில் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு தரமான மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் சட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.