தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடியில் விரிவாக்கம்: கூடுதலாக 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

3 months ago 9

சென்னை: தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடியில் ஈரோட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய தொடங்கியுள்ளது. மில்கி மிஸ்ட் நிறுவனமானது 1992ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 72 ஏக்கரில் தனது தொழிற்சாலையை தொடங்கியது. 2014ம் ஆண்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.121 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது. விற்பனை அதிகரித்ததால் தொழிற்சாலையை 2 ஏக்கர் பரப்பளவில் இருந்து விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர் தொழிற்சாலையில் பால் பொருட்கள் மட்டுமின்றி ரெடி டு ஈட் சப்பாத்தி, பரோட்டா, ஐஸ்கிரீம், சாக்லேட் என தற்போது 20 வகையான பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்த நிறுவனமானது வரும் ஆண்டில் ரூ.2500 கோடி அளவுக்கு விற்பனையை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பால் வர்த்தகம் மட்டுமின்றி பன்னீர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற மாற்று வழியை கையாண்டதால் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. தற்போது வட இந்திய மாநிலங்களுக்குள் நுழையும் திட்டத்தையும் மில்கி மிஸ்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதற்காக தொழிற்சாலையின் அடிப்படை கட்டமைப்பையும், விநியோகத்தை விரிவாக்கம் செய்யும் பணியை முன்னெடுத்துள்ளது. தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மில்கி மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது. ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முதல் கட்டமாக ரூ.900 கோடி முதலீட்டி விரிவாக்கம் செய்கிறது. பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கத்தினால் கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த 16வது அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி என 15 புதிய தொழில் திட்டங்களுக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டன. இதன் மூலம் ரூ.44,125 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடியில் விரிவாக்கம்: கூடுதலாக 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article