டெல்லி : ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் அதிக அளவிலான நிதியை பெறுவது அம்பலம் ஆகி உள்ளது. விளையாட்டின் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு மிகவும் சொற்ப அளவிலான நிதியை மட்டுமே வழங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டமான கேலோ இந்தியா 2023 மற்றும் 2024ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் நாடு முழுவதும் விளையாட்டுத் துறையின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு சார்பில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் முறையே ரூ.606 கோடி மற்றும் ரூ. 500 கோடி நிதியை பெற்றுள்ளனர்.
இதே போன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் ரூ.193 கோடி நிதியை பெற்றுள்ளது. விளையாட்டுத் துரையின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் ரூ.180 கோடி வழங்கி உள்ளது. அதே நேரம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக திகழும் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.29.50 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 322 புதிய விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதியானது, வடகிழக்கு மாநிலமான சிக்கிம் பெற்ற நிதியை காட்டிலும் ரூ.33.34 கோடி குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களிலிலேயே, தமிழ்நாட்டுக்குதான் மிகவும் குறைவான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
The post தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையையும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசு : கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.