
சென்னை,
தமிழ்நாடு பா.ஜ.க.வின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். பா.ஜ.க. வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர். முன்னதாக பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், ""எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான். அன்றைய சூழலில் உள்துறை மந்திரியும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வர். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசிக் கொள்வார்கள்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அண்ணாமலை புயலாக இருப்பார், நான் தென்றலாக இருப்பேன். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். மிகப்பெரிய ஊழல் கட்சி என்று சொன்னால் அது காங்கிரஸ் கட்சிதான்" என்று கூறினார்.
முன்னதாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்சாவும் கூறவில்லை" என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.