புதுக்கோட்டை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி புனிதம் காக்க கோரி நேற்று திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது 144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது; அதைபோல 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.