சென்னை: தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 கோட்டங்களில் 26 மண்டலங்கள் மூலம் 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. அதன்படி, 3.5 லட்சம் பேர் சென்னையில் மட்டும் மாநகர பஸ்களில் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
இந்த பேருந்துகளுக்கான டீசல் செலவினம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், காற்று மாசு ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளன. ஏற்கனவே, டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான திட்டம் வகுக்கப்பட்டன.
குறிப்பாக, டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி (காஸ்) பயன்படுத்தி இயக்கினால் மைலேஜ் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின் படி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அந்தவகையில் முதற்கட்டமாக 1000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்து முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிஎன்ஜி (காஸ்) மாற்றப்பட உள்ள பேருந்துகள் அதிகபட்சமாக 8 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளாக இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி கூறியதாவது:
சிஎன்ஜி என்ற இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாது. மேலும் டீசல் பேருந்துகளை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகள் இயக்கத்தின் மூலம் செலவு குறைந்து வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது முதற்கட்டமாக டீசலில் இருந்து சி.என்.ஜி (காஸ்) மாற்றப்பட்ட உள்ள 1000 பேருந்துகளை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 டீசல் பேருந்துகளை காஸ் பேருந்துகளாக மாற்ற முடிவு: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.