
புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருக்கும் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை கைது செய்ய இன்டர்போல் உதவியையும் நாடப்பட்டது.இதைத்தொடர்ந்து நிரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
இதைப்போல ஆண்டிகுவா குடிமகனான மெகுல் சோக்சியும் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெல்ஜியம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. அவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த மாபெரும் வங்கிக்கடன் மோசடியில் நிரவ் மோடியின் இளைய சகோதரர் நேஹல் மோடியும் (வயது 46) முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
குறிப்பாக போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மூலம் சட்ட விரோதமாக பணத்தை மாற்றுவதில் நேஹல் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாகவும், நீரவ் மோடியின் சட்ட விரோத செயல்களுக்கு தெரிந்தே உதவியதாகவும் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.தனது சகோதரர் நிரவ் மோடியைப்போல நேஹல் மோடியும் நாட்டை விட்டு தப்பியோடி இருந்தார். அவரை கைது செய்வதற்கு இன்டர்போல் உதவியை இந்தியா நாடியது. அதன்படி அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக நேஹல் மோடி தற்போது அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் வேண்டுகோளின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நேஹல் மோடி தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 17-ந்தேதி வருகிறது. அப்போது அவர் ஜாமீன் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அவர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம், குற்றச்சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் மற்றொரு குற்றவாளியான நேஹல் மோடி கைது செய்யப்பட்டு இருப்பது இந்த வழக்கில் மற்றொரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அவரை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.