தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்

3 hours ago 1

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதனை சென்னையில் வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தனர். இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும், தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்குகிறது. கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து தரப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்பட உள்ளது. இறுதி மானியம் ரூ.1.50 லட்சத்துக்கு மருந்துகள் வழங்கப்படும். இவைதவிர விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்வர் மருந்தகங்களில் குறைந்தவிலைக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் மட்டும் திறக்கப்பட உள்ள முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை 33

The post தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article