தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீங்கள் பெற்ற சட்ட வெற்றியின் அரசியல் முக்கியத்துவம் என்ன, நாடு முழுவதும் உள்ள ஆளுநர்கள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து?
மாநில உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் உறுப்பினர்களையும் கொண்ட சட்டமன்றத்தின் தீர்மானம்தான் வலிமையானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்கக் கடமைப்பட்டவர் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்காமல் காலவரையின்றி ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போட்டு வைப்பதோ, தன்னுடைய அதிகார வரம்பை மீறி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதோ சட்டவிரோதம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியிருக்கும் அம்சமாகும். தமிழ்நாடு அரசின் வழக்கில் கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
2. ஆளுநர் ரவி அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது, ஆளுநர்கள் அரசியல் நிகழ்வுகளை நடத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?
தனிப்பட்ட முறையில் ஆளுநர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடிப் பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத – ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் வாயிலாக தீர்ப்பைப் பெற்று ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுகிறது. ஆனாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் அசைன்மென்ட்டை நிறைவேற்றும் சட்டவிரோதப் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆர்.என்.ரவி அவர்கள் திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.
3. கூட்டாட்சி விவாதத்தை மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டீர்கள். மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்கான நீதிபதி ஜோசப் குழுவுடன் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
டெல்லியில் இருப்பவர்கள் சுல்தான்களும் இல்லை; தமிழ்நாடு போன்ற மாநிலங்களை ஆள்பவர்கள் அடிமைகளும் இல்லை! இதைத்தான் தி.மு.க. தொடர்ந்து சொல்லி வருகிறது.
மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். அதன் காரணமாக, மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான சில நடவடிக்கைகளும், அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களும் கடந்த காலங்களில் நிறைவேறியுள்ளன. ஆனால், தற்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு தன்னை சுல்தானாக நினைத்துக்கொண்டு, மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறது. கல்வி உரிமை, நிதி உரிமை, வரி உரிமை, அதிகார உரிமை எனப் பலவற்றையும் பறித்து வருகிறது. தமிழ்நாட்டையும் தென்னிந்தியாவையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, ஆட்சி அமைக்கும் வகையில் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையைக் காரணம் காட்டி குறைக்கக்கூடிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்தியாவில், மாநிலங்களே இல்லாத நிலையையும், அப்படியே இருந்தாலும் அவை வெறும் முனிசிபல் கார்ப்பரேஷன் போன்ற சாதாரண அதிகாரங்கள் கொண்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடனும் பா.ஜ.க அரசு செயல்படுவதால், இந்த அச்சுறுத்தலையும் ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்கொள்ளவே ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று பேரைக் கொண்ட ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழுவை அமைத்துள்ளோம். எங்கள் நோக்கம், மாநிலங்கள் அதிகார பலம் பெறும்போது ஒன்றிய அரசு வலிமையானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதுதான். அது நிச்சயம் நிறைவேறும். ஏனெனில், பா.ஜ.க.வே நிரந்தரமாக இந்த நாட்டை ஆளப்போவதில்லை. சர்வாதிகாரப் போக்கை காலம் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு.
4. ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு எதிரான தென் மாநிலங்களின் கூட்டு எதிர்ப்பை நீங்கள் வழிநடத்துகிறீர்கள். இது தேர்தல் ஆதாயங்களாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
மாநில உரிமைக்கான குரலை 1957 முதலே திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது. 1962-இல் மாநிலங்களவையில் அதனைப் பேரறிஞர் அண்ணா எழுப்பினார். 1969-இல் முதலமைச்சராக கலைஞர் தனது முதல் டெல்லி பயணத்தின்போதே மாநில உரிமைகளை நிலைநாட்டக் குழு அமைக்கப்படும் என்றார். ராஜமன்னார் குழுவின் அறிக்கையைப் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானத்தை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தார். தி.மு.க முன்னெடுத்த அந்தக் குரலைத்தான் பிற மாநிலங்களும் எதிரொலித்தன.பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய மாநில உரிமைக்காகப் பேசவில்லையா?
கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான இடதுசாரி அரசு கவிழ்க்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டபோதும் அந்தந்த மாநிலங்களின் குரலாக ஒலித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் மாநில உரிமைகளுக்கான நடவடிக்கைகளை தி.மு.க. மேற்கொள்கிறது. இது வெறும் தேர்தல் ஆதாயத்திற்கானதல்ல; நாட்டின் ஒருமைப்பாடு சிதையாமல் இருப்பதற்கான பாதுகாப்பு!
5. மொழி, மக்கள்தொகை அடிப்படையிலான எல்லை நிர்ணயம், நீட், வக்ஃப் சட்டம், வரி வருவாயைப் பகிர்தல் போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் ஒன்றிய அரசை எதிர்த்து வருகிறீர்கள். அதே நேரத்தில் திராவிடர்கள், ஆரியர்களுக்கு முந்தையவர்கள் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளீர்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள உத்தி என்ன? முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பாஜகவுக்கு உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று மாநிலங்களவையில் தனது முதல் பேச்சில் சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அதனால் நாங்கள் மராத்தியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, குஜராத்திகளுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதையும் அதன் தொடர்ச்சியாக அண்ணா குறிப்பிட்டார். அதையே கலைஞர், ‘உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்றார். தமிழ் மொழி இந்தியாவின் மூத்த மொழி என்பதை பல்வேறு அறிஞர்கள் – ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதி பெற்ற மொழியும் தமிழ் மொழிதான்.
தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிற நிலையில், தமிழின் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் நிலைநாட்ட வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது. இரும்புத் தாதினில் இருந்து அதனைப் பிரித்தெடுத்து இரும்புக்கருவிகள் செய்யும் தொழில்நுட்பம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அறிவியல்பூர்வமாக நிலைநாட்டியிருக்கிறோம். இத்தகைய பெருமைமிக்க ஒரு மொழியையும் அதன் மக்களையும் வாழ்த்துவதற்கு கூட பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசினருக்கு மனமில்லை என்றால் தமிழர்களை இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்களாக நினைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது இயல்பு.
வடமாநிலங்களில் தனக்குள்ள செல்வாக்கே போதும் என்ற நினைப்பில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பா.ஜ.க. தொடர்ந்து வஞ்சிக்கிறது.
6. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத பிற மாநிலங்களில் நிதி பகிர்வு தேக்கமடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூறுகின்றன? இந்த பிரச்சினையில் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஒரு சாத்தியமான தீர்வாக இருக்குமா?
இந்தி மொழித் திணிப்பை ஏற்காததால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தரவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக்கூட பேரிடர் நிவாரண நிதியை உரிய முறையில் வழங்கவில்லை. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடோ, வரிப்பகிர்வோ ஒன்றிய பா.ஜ.க அரசால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலன் சார்ந்த சாதகமான எந்தத் தீர்வுக்கும் பா.ஜ.க. தயாராக இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.
7. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழல் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப இந்த பிரச்சினைகளை நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்கள் என்ற எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள்? உங்கள் நான்கு ஆண்டுகால ஆட்சியில், நீங்கள் என்ன சாதித்தீர்கள், என்ன செய்யத் தவறிவிட்டீர்கள்? எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்ய வேண்டுமே?
அதுவும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கின்ற பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அரசியல் செய்ய ஏதாவது வேண்டுமே?
அதற்காக அவர்கள்தான், நாட்டிற்கு அத்தியாவசியமான தீர்வுகளைப் பின்தள்ளிவிட்டு, பூதக்கண்ணாடி வைத்து குறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அமைதித்தன்மைக்கும் எவ்வித இடையூறுமில்லாத நிலையில், இடையூறு செய்ய நினைக்கும் அரசியல் சக்திகளின் சதிவேலைகளைக் கண்டறிந்து முறியடித்தும், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
8. தற்போதைய பதவிக்காலத்தில் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாக மார்ச் 2021-இல் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்‘ மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் என்று ஏழு உறுதிமொழிகளை வழங்கினேன். அந்த இலக்குகளை அடைவதற்கான பயணத்தில்தான் எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி, இன்று 9.69 விழுக்காட்டு வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைத் தலை நிமிர்ந்து நடைபோட வைத்திருக்கிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற சமத்துவ – சமூகநீதி லட்சியத்தோடு, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம்.
9. 2026 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க திமுக எவ்வாறு தயாராகி வருகிறது, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான குறிக்கோள் உங்களைத் தோற்கடிப்பதாகும்.
தி.மு.க. தன் கொள்கைக் கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறது. அந்த வலிமையை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், தி.மு.க.,வை வீழ்த்தலாம் என்று எந்தவிதக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். தி.மு.க.,வின் கொள்கைக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அ.தி.மு.க.வினர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்மையான பலனைத் தந்திருப்பதாலும் 2026ல் மீண்டும் வெற்றி பெறும் அளவிற்கு திமுகவும்-அதன் கூட்டணிக் கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. எதிரணியினர்தான் தங்களுக்குச் சவால் யார் என்பதைத் தேட வேண்டும்.
10. மத்திய அரசுக்கு எதிரான உங்கள் எதிர்ப்பில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுடன் தமிழகத்தின் நீர் தொடர்பான பிரச்சினைகளில் எவ்வாறு சமநிலைப்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?
மாநில சுயாட்சிக் கொள்கை என்பதே மாநிலங்களுக்கிடையிலான இணக்கமான முறையில் சுமுகமான – பாதிப்பில்லாத தீர்வுகளை எட்டுவதுதான். அண்டை மாநிலங்களுடன் தி.மு.க. அரசு நல்லுறவை வளர்க்கும்! தமிழ்நாட்டிற்குரிய பங்கினைப் பெறும்!
The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி appeared first on Dinakaran.